சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கம் அதிகரித்துவிட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்.நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது.பள்ளிக் கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கள்ளர் சீர்மரபு பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகளுக்கு கீழ் கொண்டு வரும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆல்பாபெட் ஆர்டரில் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க போவது கிடையாது.மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது. சமூக நீதி படை என்ற பரிந்துரை குறித்து முழு விவரம் இல்லை. பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.