அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதீத வெப்பம் காரணமாக டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேர் உயிரிந்துள்ளனர். கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 12 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லோகியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், வெப்பச்சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு மருத்துவமனைகளில் வெப்ப அலை நிலைமை மற்றும் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த நட்டா, அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை பிரிவுகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.