தேர்வில் தோல்வி- கண்டித்த தாய் தம்பியை கொலை கல்லூரி மாணவர் கைது

சென்னை திருவொற்றியூர் திருநகர் முதல் தெரு மார்வாடி காலனியை சேர்ந்தவர் பத்மா (48). இவரது கணவர் முருகன் ஓமன் நாட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் நித்தேஷ் என்ற மகனும், 15 வயதில் சஞ்சய் என்ற இளைய மகனும் உள்ளனர். பத்மா அக்குபஞ்சர் தெரப்பிஸ்ட்டாக வேலை செய்து வந்தார். நித்தேஷ் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். சஞ்சய் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நித்தேஷ் சரிவர படிக்காமல் இருந்ததாகவும், 14பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததாலும் அவரது தாய் பத்மா அடிக்கடி நித்தேஷை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், நித்தேஷ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர், அவரது நண்பர்கள் சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நித்தேஷை கடந்த சில நாட்களாக தேர்வில் தோல்வி அடைந்தது குறித்து மீண்டும் பத்மா கண்டித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த நித்தேஷ், 20-ம் தேதி அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தாய் பத்மாமற்றும் அவரது தம்பியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வீட்டையும் பூட்டிவிட்டு வெளியேறி உள்ளார். பின்னர், 21-ம் தேதி இரவு தனது பெரியம்மா வீட்டுக்கு நித்தேஷ் சென்றுள்ளார். அங்கு, தனது செல்போனில் இருந்து பெரியம்மாவின் மகளுக்கு, அம்மாவையும், தம்பியையும் கொலை செய்துவிட்டதாக வாட்ஸ்-அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். பின்னர், செல்போன், வீட்டு சாவியை அங்கேயே வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெரியம்மாவின் மகள், நித்தேஷ் வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, பத்மாவும், சஞ்சய்யும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததையும், அவர்களது உடல்பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டி ருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் போலீஸூக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸார், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த நித்தேஷை தேடி வந்த நிலையில், நேற்று காலை அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘நித்தேஷ் 3-ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். தற்போது அவருக்கு 14 அரியர்கள் உள்ளன. ‘அப்பா வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்து உன்னை படிக்க வைக்கிறார். ஆனால், நீ 14 பாடங்களில் தோல்விஅடைந்திருக்கிறாய்’ என நித்தேஷை அடிக்கடி அவரது தாய் பத்மா கண்டித்து வந்துள்ளார். மேலும், நித்தேஷை படிக்க சொல்லி அடிக்கடி பத்மா கூறிவந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நித்தேஷ் தாயை கொலை செய்ய முடிவு செய்து, பல நாட்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இதையடுத்து, 20-ம் தேதி அதிகாலை பத்மா மற்றும் அவரது தம்பியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தி வருகிறோம்’’ என்றனர். திருவொற்றியூரில், தாய், தம்பியை கல்லூரி மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Leave a Comment