64 பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 2 குழந்தைகள் பலி- பலர் படுகாயம்

குஜராத்தின் டாங் மாவட்டத்தில் இன்று 64 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

சொகுசுப் பேருந்து சூரத்தில் இருந்து சபுதாராவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை 5 மணியளவில், மலை நகரமான சபுதாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த மற்ற நபர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

Related posts

Leave a Comment