ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.
அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.
தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது.
வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன். அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது.
சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் கிராஸாவை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.