ராஜஸ்தானின் பள்ளியில் சக மாணவனை கத்தியால் குத்திய மாணவனின் வீடு இடித்து தரைமட்டம்

அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், சக மாணவனை 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தானின் உதய்பூரில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவன் வசித்து வந்த வீடு, ஜேசிபி வாகனம் மூலம் சனிக்கிழமை(ஆக. 17) இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புக் கட்டடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததாக அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு பயின்று வந்த இரு மாணவர்கள் இடையே வெள்ளிக்கிழமை(ஆக. 16) தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் தகராறில் ஈடுப்பட்ட மாணவன், தான் வகுப்பறைக்கு எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக மாணவனை பலமாகக் குத்தியுள்ளான்.

மோதலில் ஈடுப்பட்ட மேற்கண்ட இரு மாணவர்களும் வெவ்வேறு சமூகப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரு சமூகப் பிரிவினருக்குமிடையே கலவரம் மூண்டுள்ளது. மாணவன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் தெரிய வந்ததும், பாதிக்கப்பட்ட் மாணவனின் சமூகத்தை சார்ந்த சிலர் பள்ளிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை தீ வைத்துக் கொளுத்தியதால் பரபரப்பு அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதய்பூரில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

Leave a Comment