பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார்.
சமீபத்தில் பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும் என்று கடுமையாக விமர்சனத்தை முனைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சி விதிப்படி மோடி, 2025 செப்டம்பர் 17 அன்று தனது 75 வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும் என்று பதிவிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 75 வயதில் ஓய்வு பெரும் விதி மோடிக்குப் பொருந்தாது என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில் சுப்ரமணிய சுவாமி இவ்வாறு பதிவிட்டுள்ளது பேசுபொருள்ளாகியுள்ளது.
முன்னதாக மக்களவை தேர்தல் சமயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரச்சாரத்தின்போது பேசுகையில், இவர்கள் இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் பாஜக கூட்டணியின் பிரதமர் முகம் யார், 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று மோடி ஏற்படுத்திய விதியின்படி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோரை ஓய்வு பெறச் செய்தனர். ஆனால் மோடி ஜி அடுத்த வருடம் 75 வயதை எட்ட உள்ளார். எனவே பிரதமர் நாற்காலியில் அமர உள்ள அமித் ஷாவுக்காக ஓட்டுக் கேட்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.