சேலம் ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு திட்டமிட்டு பழி வாங்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அண்மையில் தி.மு.க. சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாணயம், சென்னையில் வெளியிடப்பட்டடது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மூத்த மத்திய மந்திரி கலந்து கொண்டார். மேலும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி மற்றும் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அவர்கள் அந்த கூட்டணியின் தேசிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது ராகுல்காந்தியை அழைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு ஊழல் நிறைந்த ஆட்சியாக இது இருக்கிறது. அதை மறைக்க மத்திய அரசு தயவு ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது. இதனால் தான் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரியை அழைத்து வெளியிட்டு உள்ளனர். இதைச் சொன்னால் தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் கோபம் வருகிறது.
தி.மு.க. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சி. ஆனால் இந்தியா கூட்டணி கட்சியினரை அழைக்காமல் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியை சேர்ந்தவர்களை அழைத்தது சந்தேமாக உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபற்றி கேட்டால் இது மத்திய அரசு விழா என்று கூறுகின்றனர். அழைப்பிதழில் மாநில அரசு எம்பளம், தலைமை செயலாளர் அழைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே இது மாநில அரசு விழாதான். இதைச் சொன்னால் மாநில தலைவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. என்னை வசைபாடுகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வந்தபோது அவருக்கு சிறப்பு, புகழ் சேர்க்கும் வகையில் அ.தி.மு.க சர்பில் நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அந்த நாணயத்தை அ.தி.மு.க. தொண்டனாக முதலமைச்சராக அப்போது நான் வெளியிட்டேன். அதை சிறுமைப்படுததி பேசி உள்ளது சிறுபிள்ளைத்தனமானது. எம்.ஜி.ஆர். 3 முறை முதலமைச்சராக இருந்தவர். வரலாறு தெரியாமல் பா.ஜனதா தலைவர் பேசுகிறார். எனக்கு தெரிந்து அவர் 1984-ல் தான் பிறந்துள்ளார். அவர் பிறப்பதற்கு முன்பே எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பாரத ரத்னா விருது, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் கொள்கைகள், திட்டங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. உங்கள் தலைவர்கள் யாரும் அப்போது எந்த பதவியிலும் இல்லை. பா.ஜனதாவின் அடையாளத்தை வைத்துதான் நீங்கள் வெற்றி பெற முடியும். அ.தி.மு.க. ஊழல் ஆட்சி என்று கூட்டணியில் சேர்ந்து 2021 தேர்தலில் போட்டியிட்டு சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தபோது தெரியவில்லையா? மசோதா நிறைவேற்ற ஆதரவு தேவைப்படும் போது தெரியவில்லையா? கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் கடன் 55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 168 கோடியாக அதிகரித்து உள்ளது. அப்படி என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள்.
தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் 500 நாட்களில் 100 திட்டம் கொண்டு வருவேன் என்று கூறினார். அப்படி என்ன திட்டத்தை கொண்டு வந்தார். அவர் பேசுவதெல்லாம் பொய். அ.தி.மு.க. 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்று பல விருதுகள் பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். கால்நடை பூங்கா பூட்டியே கிடக்கிறது. ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்ததை ரஜினிகாந்த் வெளிப்படையாகவே பேசி உள்ளார். அதை வரவேற்கிறேன். தி.மு.க.-பா.ஜனதா வெளியே எதிரியாகவும், உள்ளே உறவாகவும் உள்ளனர். ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தவர். அதனால் தலை, கால் புரியாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு முதலீடு வாய். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயலுக்கு எந்த நிவாரணமும் வாங்கி தரவில்லை. அ.தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தாலும் மாநில உரிமைக்கு குரல் கொடுத்து வருகிறோம்.