புதுச்சேரியில் 15 ஆண்டுகள் குடியிருந்தோர்க்கு மட்டுமே அரசு வேலை நேரு எம்எல்ஏ முதல்வரிடம் கோரிக்கை

புதுச்சேரி.ஆக.28- அபுதுச்சேரியில் 15 ஆண்டுகள் குடியிருந்தோர்க்கு மட்டுமே அரசு வேலை நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்பினர் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசிதழ் பதிவு பெறாத (குரூப் பி) பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு நடைபெறும் தேர்வுகள் புதுச்சேரி காரைக்காலில் வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

குரூப் பி பணியிடங்களுக்கு புதுச்சேரி அரசே தேர்வுகள் நடத்தி பணியிடங்களை நிரப்பிக் கொள்ள முடிவெடுத்த புதுச்சேரி முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி அரசின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறை 22 8 2024 அன்று 256 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பிலுவினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் தயார் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நடைமுறைக்கு எதிரானது, இது தாய் மொழியான தமிழை புறக்கணிக்கும் செயலாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வுகளே அந்தந்த மாநில மொழியில் நடைபெறும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் முதன்முதலாக புதுச்சேரியில் நடைபெறும் இந்த தேர்வு தமிழில் நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக புதுச்சேரி காரைக்காலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றவர்கள் ஆங்கிலத்தில் புலமைப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதற்கு தான் தேர்விலேயே கணக்கு, பொது அறிவு கனிணி அறிவு பகுதி மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள் அதாவது இரண்டு தேர்விலும் சேர்த்து ஆங்கிலத்திற்கு 55 மதிப்பெண்களுக்கான வினாக்களும் கேட்கப்படுகிறது. ஆங்கிலத்தில் புலமை உள்ளவராய் என்பதை தீர்மானிப்பதற்கு இதுவே போதுமானது.

நம் புதுச்சேரி மாநிலம் தாய்மொழியான தமிழ்மொழி பேசப்படும் இந்திய ஒன்றியமாகும். மொழி வழி இன வழி உரிமை அடிப்படையிலும் புதுச்சேரியில் தமிழில் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும். அந்த வகையிலும் இந்த தேர்வு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
அறிவிப்பில் வினாத்தாள் எப்படி தயாரிக்கப்படும் எப்படி இருக்கும் என்று அறிவிப்பில் முதல் தாளும் இரண்டாம் தாளும் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் அப்செக்டிவ் வகையில் உள்ளதும் நடைமுறைக்கு மாறானது. முதல் தாள் சரியான விடையை தேர்ந்தெடுக்கக்கூடிய வகையிலும் இரண்டாம் தாள் வினாவிற்கு விளக்கமாக பதில் எழுதும் கேள்வி பதில் முறையிலும் தமிழ்நாடு, மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வுகளும் அவ்வாறே இருக்கிறது. அதுபோல முதல் தாள் சரியான விடையை தேர்ந்தெடுக்கக்கூடிய வகையிலும் இரண்டாம் தாள் வினாவிற்கு விரிவான பதில் எழுதும் வகையிலும் இருக்க வேண்டும். மேலும் வினாத்தாள் தயாரிக்கப்படுகின்ற போது மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து தான் வினாக்கள் தேர்வு செய்ய வேண்டும் ஏனென்றால் இப்பொழுது இந்த தேர்வை எழுதுகின்றவர்கள் அனைவரும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களே ஆவார்கள்.

மேலும் புதுச்சேரியில் 5 ஆண்டுகள் குடியிருந்தவர்கள் இப்பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் உள்ளது. இதனால் புதுச்சேரி இளைஞர்களின் வேலைவாய்ப்புரிமை பறிபோகும் வாய்ப்பிருக்கிறது. கர்நாடகத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் குடியிருப்போர் தான் மாநில அரசுப் பணியில் சேர விண்ணப்பிக்க முடியும் என்ற விதி இருக்கிறது அதுபோல் புதுச்சேரியிலும் 15 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற திருத்தம் கொண்டு வாருங்கள்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வுகளில் பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக இருக்கும் போது இப்பொழுது வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் வயதுவரம்பு 30 என நிர்ணயித்திருப்பது உள்நோக்கம் கொண்டதும் தவறானதும் ஆகும் . மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கக்கூடிய பணியிட நிரப்பு அறிவிப்பில் பொது பிரிவினருக்கு வயது வரம்பு (32+3) 35 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சட்டப்படியான வயது தளர்வும் வழங்க வேண்டும். அதையும் புதுச்சேரி அரசு கருத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது பொதுநல அமைப்பு தலைவர்கள்
திராவிடர் விடுதலைக் கழகம் லோகு.அய்யப்பன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு. கோ.சுகுமாரன்,
மக்கள் வாழ்வுரிமை இயக்கம். ஜெகன்நாதன் .தமிழர் களம் அழகர், அகில இந்திய மஜிலீஸ் கட்சி சம்சுதீன், அம்பேத்கர் தொண்டர் படை. பாவாடைராயன், நகரத் தலித் பாதுகாப்பு இயக்கம். செல்வக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஸ்ரீதர், தமிழ்த் தேசிய பேரியக்கம் வேல்சாமி, புதுச்சேரி தன்னுரிமைக் கழகம். சடகோபன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சுவாமிநாதன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தாமரைச்செல்வன், பி போல்ட். பஷீர்அகமது, இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்கிளின் பிரான்சுவா, இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் கட்சி சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்

Related posts

Leave a Comment