கேரளாவில் சிங்கப்பூர் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்

இலங்கையின் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 9ஆம் தேதி சென்று கொண்டிருந்தது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சரக்கு கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கன்டெய்னர்களுக்கும் தீ பரவியதால் அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். தகவலறிந்து அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சூரத் மூலம் நடுக்கடலில் தத்தளித்த 18 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது. கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment