பயணிகளிடம் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், தனியார் பெருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி – கடலுார் வழித்தடத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்திட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில், பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடலுாரில் இருந்து கிருமாம்பாக்கம் செல்ல வேண்டுமானாலும் 20 ரூபாய் கட்டணம் செலுத்திட வேண்டும் என கேட்டு நடத்துனர், பயணிகளிடம் அடாவடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, ஆளுநர் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்நிலையில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று காலை கிருமாம்பாக்கம் சந்திப்பில் அவ்வழியாக சென்ற தனியார் பேருந்துகளை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, போலீசார், ”பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கேட்டல் கொடுக்க வேண்டாம். நடத்துனர்கள் கூடுதலாக கட்டணம் கேட்டு தொந்தரவு செய்தால், போலீசாருக்கு தெரியப்படுத்துங்கள்.
அவர்களின் மீதும், சம்மந்தப்பட்ட பஸ் நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மேலும், பஸ் நடத்துனர்களிடம், கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக மீண்டும் புகார் எழுந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தனர்.