அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் உடல் 25 நாட்களுக்கு பிறகு புதுவை வந்தது

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்காவின் ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி, குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

இதற்கிடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 21-ந்தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். அதன் பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியை கொன்று கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் ஆதரவற்று இருந்தனர். அவர்களை அங்குள்ள தமிழர்கள் பராமரித்து வந்தனர். பின்னர் அந்த குழந்தைகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த பாலசுப்பிரமணியன் அமெரிக்காவில் கடந்த 2013-ம் ஆண்டு பீட்டி என்ற அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விவகாரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் முதல் மனைவியான பீட்டி, பால சுப்பிரமணியனின் ஆதரவற்ற 3 குழந்தைகளையும் தானே தத்தெடுத்து வளர்ப்பதாக தெரிவித்தார். அதன்படி அவரிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே சவுமியாவின் உடல் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்பிரமணியன் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர அவரது தாய் மற்றும் உறவினர்கள் புதுவை முதல்-அமைச்சர், கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் உடலை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதைதொடர்ந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் உதவியுடன் பாலசுப்பிரமணியன் உடல் 25 நாட்களுக்கு பிறகு நேற்று கார்க்கோ விமானம் மூலம் சென்னை வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு பாலசுப்பிரமணியன் உடல் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment