ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டடு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் தற்போது முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலில் 63.45 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. முன்னதாக யாருக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தன.
ஆனால் தற்போது அதை பொய்யாகும் விதமாக காங்கிரஸ் – என்.சி.பி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட பாஜக 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது .
அதேவேளையில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி [பிடிபி] 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முன்னதாக கருத்துக்கணிப்புகளின்படி மெகபூவாவின் கட்சி 7 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் அவர் கிங் மேக்கராக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
இதனால் என்சிபி தலைவர் பரூக் அப்துல்லாவும் நேற்றைய தினம் மெகபூபா கட்சிக்கு தங்களுடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போதைய நிலவரங்கள் பிடிபி கட்சி தோல்வி முகத்தில் இருப்பதையே பிரதிபலிக்கிறது.
குறிப்பாக பிடிபி கட்சி சார்பில் ஸ்ரீகுஃப்வாரா – பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்ட மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா [36 வயது] தோல்வி முகத்தில் உள்ளார். தான் கடுமையாக உழைத்ததாகவும், இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இல்திஜா தெரிவித்துள்ளார். இல்திஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி உள்ள பஷீர் அமது வீரி வெற்றி முகத்தில் உள்ளார்.
பஷீர் அமது வீரி 31292 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 22534 வாக்குகள் பெற்று அவரை விட 8758 வாக்குகள் வித்தியாசத்தில் இல்திஜா பின்தங்கியுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட நபர் வெரும் 3468 வாக்குகள் மட்டுமே பெற்று 27824 வாக்குகள் பின்தங்கியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 5 இடங்களைத் தாண்டி மெகபூபாவின் பிடிபி கட்சி வெற்றி பெறாது என்று கூறப்படுகிறது.
இதற்கு முற்றிலும் மாறாகக் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மெகபூபாவின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. 25 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்து மெஹபூபா முதலமைச்சர் ஆனார். ஆனால் அதற்கு பின்னர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கி சிறப்பு அந்தஸ்தை பாஜக நீக்கியதே இந்த தேர்தலில் இரண்டு கட்சிக்கும் பலத்த அடியாக அமைந்துள்ளது.