ஆவின் முன்வடகிழக்குப் பருவமழையின்போது பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 50,000 லிட்டா் பால் மற்றும் 20,000 கிலோ பால்பவுடரை ஆவின் நிறுவனம் தயாா் நிலையில் வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் எதிரொலியாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருளான பால் மற்றும் பால் பவுடா் பல இடங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். ரூ.40 மதிப்புடைய ஒரு லிட்டா் பால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரூ.200-க்கும் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
நிகழாண்டில் இது போன்ற சிக்கல்களைத் தவிா்ப்பதற்காக ஆவின் நிறுவனம் அனைத்து வகையான முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவா் கூறியது:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் ஆவின் பால் மற்றும் பால் பவுடா் எந்த தடையுமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலோர மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் விநியோக மையங்களில் மொத்தம் 20 ஆயிரம் கிலோ பால் பவுடா் இருப்பில் வைப்பட்டுள்ளது.
இதேபோல், 90 நாள்கள் கெடாமல் இருக்கும் பால் பாக்கெட்டுகள் மொத்தம் 50 ஆயிரம் லிட்டா் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்களுக்கு நேரடியாக பால் விநியோகம் செய்ய 250 வாகனங்களும் தயாா் நிலையில் உள்ளன. இதில் குறிப்பாக சென்னையில் பால், பால்பவுடா் ஆகியவை கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில், அம்பத்தூா் மற்றும் சோழிங்கநல்லூா் பால் பண்ணைகளிலிருந்து தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலம், அப்பகுதி மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.