சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துள்ளது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு மழை படிப்படியாக குறைந்து தற்போது மிதமான மழையே பெய்து வருகின்றது.

நேற்று முழுவதும் பெய்த கனமழையினால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கியது. அதனைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து களப்பணியில் உள்ளார். பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று(புதன்கிழமை) காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைக்கப்படவிருக்கும் நீர் நிலை, பூங்கா குறித்த பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பள்ளிக்கரணை பகுதியில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் பள்ளிக்கரணையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ‘பல இடங்களில் தேங்கிய வெள்ளநீர் வடிந்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கைகொடுத்துள்ளது. மக்களிடமே கேளுங்கள். கடந்த 3 மாதங்களாகவே பருவமழைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் இதற்கென ஒரு குழு அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த குழு பரிந்துரைத்த பணிகளை படிப்படியாக செய்து வருகிறோம். முழு பணிகளையும் விரைவில் முடிப்போம்.மழை, வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கும் நன்றி’ என்று கூறினார்.

Related posts

Leave a Comment