தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினம் என தமிழ்நாடு நாளுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை மாகாணம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழக மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள் (நவ.1) தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு நாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை நேற்று பகிர்ந்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழகத்தின் எல்லையை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவ.1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் மண், தமிழ் மொழி என்று, நம் தமிழுக்கும் நம் மண்ணுக்கும் உரிமையான எல்லைகளை நம்மோடு இணைத்துக் கொண்ட நாள் இன்று (நேற்று). அதற்காக போராடிய தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் வணக்கம் செலுத்துவோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான தமிழ்நாடு நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள். தீயசக்தியின் ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழகத்தை விரைவில் மீட்டு மீண்டும் நம் மாநிலத்தை மிளிரச் செய்வோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினம் இன்று. திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, இந்நாளில் உறுதியேற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல ஏதுவாக ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற குறிக்கோளுக்கு செயல் வடிவம் அளிக்கும் வண்ணம் வளர்ச்சியான மாடலை உருவாக்க தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம் சகோதர உணர்வுடன் ஏற்றுக் கொண்டோம். ஆனால் மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது தான் அதிகம். எனவே நாம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.
தவெக தலைவர் விஜய்: நம்முடைய மாநிலம் தனி மாநிலமாக உருவெடுத்த நாளில், தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூர்வோம். தமிழர்களின் வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினத்தை போற்றி மகிழ்வோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகம் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாள். இந்நாளை போற்றிக்கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை. இந்நாளில் எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி திருவிழாவாக கொண்டாடுவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்நாடு உருவான நாளை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ வேண்டும். இந்நாளில் மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமைகளையும் எந்தவித சமரசமுமின்றி நிலைநாட்ட நாம் உறுதியேற்போம்.