சபரிமலையில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கவிருக்கும் நிலையில் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை நிரம்பி வழிகிறது. பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். மண்டல சீசனில் 41 நாட்களில் மொத்த வருமானம் ரூ.297 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 679 ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், மண்டல சீசனில் கடந்த ஆண்டை விட ரூ.82 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 781 கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment