அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள்
ஸ்டிக்கர்களை மாற்றிய பிறகு அதிக மதிப்புமிக்க பொருளை குறைவான மதிப்புடைய ஸ்டிக்கரை பயன்படுத்தி வாங்கி விடுவார்கள். அதிக மதிப்புமிக்க பொருளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குறைவான மதிப்புடைய பொருளுக்கு தவறான OTP சொல்லி இறுதியில் ஆர்டரை ரத்து செய்து விடுவார்கள்.
அமேசானின் டெலிவரி பார்ட்னரான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் இவர்களின் தந்திரத்தை கண்டுபிடித்து அமேசான் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ராஜ் குமார், சுபாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.