“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!

ரஷியா – உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில், “2024 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வட கொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனில் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்” என்றார்.

வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். ரஷியா- உக்ரைன் போரில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றங்கள் இந்தாண்டு பிப்ரவரியில் ராணுவத் தளபதியாக இருந்த ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. மேலும், ஜலுஷ்னியின் வளர்ந்து வரும் புகழ் அவரை ஜெலென்ஸ்கிக்கு அரசியல் போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment