தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
அதேபோல் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒருநாள்
கலைஞரும் நானும்
கோபாலபுரத்தில்
உரையாடிக்கொண்டிருந்தோம்
உதயநிதி தன் மனைவி
கிருத்திகாவோடு வந்தார்;
நின்றுகொண்டே பேசினார்
கலைஞர் மறுத்த ஒருகருத்தை
தன் வாதத்தை முன்னிறுத்திச்
சாதித்துச் சென்றார்
அப்போதே
தெரிந்துகொண்டேன்
வலிவும் தெளிவும் மிக்க
வல்லவர் இவரென்று
உதயநிதி
பேரீச்சம் பழம்போல்
மென்மையானவர்; ஆனால்
அதன் விதையைப்போல்
உறுதியானவர்
சின்னச் சின்ன எதிர்ப்புகள்
இவரைச் சிதைப்பதில்லை
குன்றிமணி முட்டிக்
குன்றுகள் சாய்வதில்லை
காலம் இவரை
மேலும் மேலும்
செதுக்கும்; புதுக்கும்
“தம்பீ வா
தலைமையேற்க வா”
அண்ணாவிடம் கடன்வாங்கி
அண்ணன் வாழ்த்துகிறேன்
இவ்வாறு வைரமுத்து கூறினார்.
மேலும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில், பவள விழா கண்ட பேரியக்கத்தின் இளம் தலைவர், திராவிட நாயகரின் தவப்புதல்வர், தமிழ்நாடு துணை முதல்வர்..
ஒரு கோடி இளைஞர்களின் இதயத்துடிப்பு, இரு கோடி குடும்பங்களில் உடன்பிறப்பு, நெஞ்சுறுதி நாயகர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாளில் அவரை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.