புதுச்சேரியில் ஜன. 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், டி.ஜி.பி, ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வருபவர்களுக்கு 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் இரவு 12:30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி கவர்னர் தலைமையில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
ஜனவரி 12 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வரும் பொங்கல் பண்டிகைக்குள் காவலர்களுக்கு தேர்தல் பணிக்கான அலவனஸ் மற்றும் சீருடை அலவனஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.