மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் இன்று(டிச. 29) கரைக்கப்பட்டது.
அன்னாரது உடல் தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று(டிச. 28) தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எரிவூட்டப்பட் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தி சீக்கிய மரப்புப்படி இன்று கரைக்கப்பட்டது.
இதற்காக மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர், அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் குருத்வாரா அருகே யமுனை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள அஸ்தி படிக்கரைக்கு இன்று காலை சென்று அங்கு யமுனை நதியில் கரைத்தனர்.
தில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை, நாட்டின் முதல் சீக்கிய பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன் சிங், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். அவா் வியாழக்கிழமை சுயநினைவை இழந்த நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி அவரின் உயிா் பிரிந்தது.
இதைத் தொடா்ந்து தில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா் உள்பட தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
மன்மோகன் சிங்கின் குடும்ப உறுப்பினா்கள் அமெரிக்காவிலிருந்து வரவேண்டியிருந்ததால் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச் சடங்கில் 21 குண்டுகள் முழங்க மன்மோகன் சிங்குக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. சீக்கிய மத வழக்கப்படி இறுதிச் சடங்கு நடைபெற்ற நிலையில், சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் சிதைக்கு அவரின் மூத்த மகள் உபிந்தா் சிங் தீ மூட்டினாா்.