மத்திய அரசின் ஒத்துழைப்போடு தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை என்றும் பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பேசியுள்ளார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன் திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 16 சதவீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழுமையான நிதியை பெற்று நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 16 சதவீதம் சிறப்பு கூறு நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதி முழுவதுமாக செலவிடப்படுகிறது. புதுச்சேரியின் வளர்ச்சியில் உங்களின் பங்கு அதிகம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்துடன் இணைந்து இந்த நிதி வழங்கப்படுகிறது என்றும், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தனியார் பள்ளிகளில் படிக்கும் பட்டிலின மாணவர்களுக்கு அந்த பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை அரசு முழுவதுமாக செலுத்தும். மருத்துவம் போன்று 10 சதவீதம் இடஒதுக்கீடு அனைத்து படிப்புகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் பிரதமர் கூறியதுபோன்று பெஸ்ட் புதுச்சேரிக்கான அத்தனையையும் செய்து கொண்டிருக்கின்றோம். கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது. ஏதேனும் ஒரு வாய்க்கால், கட்டிடம் கட்ட முடிந்ததா இந்த ஊரில் தான் நானும் சுற்றி வந்தேன். எனக்கு எங்கும் கட்டியதுபோல் தெரியவில்லை.மத்திய அரசின் நிதியுதவியுடன் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சி தான் அரசின் எண்ணம், இவரால் எப்படி திட்ட்டங்களை செயல்படுத்த முடிகிறது என்று, மத்திய அரசின் ஒத்துழைப்போடு தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.