ரூ. 24.24 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் சார்பில் 33.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, சுற்றுலாத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் சார்பில் 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1,512 பயனாளிகளுக்கு 24.24 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 320 பயனாளிகளுக்கு 1.84 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 708 பயனாளிகளுக்கு 10.30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான கடனுதவிக்கான காசோலைகளையும்,

வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 65 விவசாயிகளுக்கு 50.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 57 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு, 5.07 கோடி ரூபாய்க்கான வங்கிக்கடன் இணைப்புகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் 2.33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 169 பயனாளிகளுக்கு 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மறுகட்டுமானத்திற்கான ஆணைகளையும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 50 மாணவர்களுக்கு 37.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விபத்துக் காப்பீடு வைப்பு நிதி பத்திரங்களையும், முன்னோடி வங்கியின் சார்பில் 16 மாணவர்களுக்கு 1.55 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் 1,512 பயனாளிகளுக்கு ரூபாய் 24.24 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment