எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் – ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.

அந்தவகையில், இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

இதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

கூட்டத்தில் பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆகஸ்டு 10-ந் தேதி பூம்புகாரில் பா.ம.க. மகளிர் மாநாடு நடக்கிறது. அதை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளோம்.

அருள் எம்.எல்.ஏ. எப்போதும் என்னுடன் தான் இருப்பார். இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம். இன்றைய கூட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளரை புதிய நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளோம்.

தற்போது வரை பா.ம.க. எந்த கூட்டணியில் போட்டியிடும் என்பதை முடிவு செய்யவில்லை. என்னுடன் இருக்கும் நிர்வாகிகள் தான் பா.ம.க. சார்பில் தேர்தலில் நிற்பார்கள். அவர்களுக்கு தான் சீட் வழங்கப்படும்.

சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க.வில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் நிறுவனரான எனக்கே உண்டு.

பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment