வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் காட்பாடி வந்தார்.
அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் புதியபஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்றார்.
அங்கு ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லெண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.1.20 கோடி மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பிலான திருவலம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் பேரணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன். எஸ்.எம். நாசர், கலெக்டர் சுப்புலெட்சுமி, எம். எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.