மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 வாகனங்கள் டீசலில் தண்ணீர் கலந்ததால் பழுதடைந்து சாலையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பம்பில் இருந்து டீசல் நிரப்பப்பட்ட பிறகு வாகனங்கள் பழுதடைந்தன. கான்வாயின் பல வாகனங்கள் பாதி வழியில் சாலையில் பழுதடைந்து நின்றன.
ரட்லாவில் நடைபெற்ற பிராந்திய தொழில் திறன் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க மோகன் யாதவ் நேற்று சென்றிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது.
முதல்வர் கான்வாயில் உள்ள ஒரு வாகனத்தின் ஓட்டுநர், இந்தூரில் இருந்து முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் டீசலில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தெரிவித்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட பெட்ரோல் பம்ப் இழுத்து மூடப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கனமழை காரணமாக ரத்லமில் உள்ள பெட்ரோல் பம்பில் உள்ள எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெட்ரோல் பம்பிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது