பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் புதிய ஆட்சி அமைய இருப்பதால் பாராளுமன்ற வளாகம் கடந்த 2 தினங்களாக பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் பாராளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற வளாகத்துக்குள் வரும் அனைவரிடமும் ஆதார் கார்டை பெற்று ஆய்வு செய்து அதன்பிறகே அவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.
புதிய பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் தற்போது கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த கட்டுமான பணிகளுக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து கூலி தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் அனைவரும் பாராளுமன்ற வளாகத்துக்குள் பணிகளை தொடங்க சென்றனர். அவர்களை நுழைவு வாயிலில் நிறுத்தி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது 3 தொழிலாளர்கள் போலி ஆதார் அட்டையுடன் வந்திருப்பது தெரிந்தது. அவர்களது ஆதார் அட்டை தில்லுமுல்லு செய்து தயாரிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அந்த தொழிலாளர்களை அழைத்து வந்த தனியார் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லி போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் அந்த 3 தொழிலாளர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் காசிம், மோனிஷ், சோயிப் என்று தெரியவந்தது.
அவர்கள் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.