குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 35) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
நேற்று காலை குவைத் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட 7 தமிழர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் தனி ஆம்புலன்ஸ் மூலம் முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் செஞ்சி மற்றும் காட்டுமன்னார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.
அப்பொழுது முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.
முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்ததும் அவர்களது மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த்துறையினர் முகமது ஷெரிப் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை அவருடைய மத வழக்கப்படி முகமது முகமது ஷெரீப் உடல் உறவினர்கள் முன்னிலையில் செஞ்சியில் உள்ள பத்ஹா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்தனர்.
அதுபோல் சின்னதுரை உடலுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வட்டாட்சியர் சிவக்குமார், எம்.ஆர்.கே. கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் மற்றும் காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், கேபிள் எழில் சிவா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சின்னத்துரை உடல் அடக்கம் செய்யப்பட்டது.