வில்லியனூரில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி 20ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17 ம் தேதி கருடசேவையும், 18 ம் தேதி மஞ்சள் நீர் வஸந்தோத்ஸவம் உள்புறப்பாடும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று காலை 7.00 மணிக்கு நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவா ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷமிட்டு இழுத்து சென்றனர். தேரானது கோயிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அலுவலர் சந்தானராமன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.