சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன் அடையும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்பட்டும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டிட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டிட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
அதே போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் அதற்காக விதிகளை மீற கூடாது. கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி, அந்த துறையின் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் நகர்புற வளர்ச்சி குழுமங்கள் பொதுமக்களுக்கு எளிதான சேவைகள் வழங்க தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் கொண்டு மக்களுக்கு தனி இணைய செயலி உருவாக்கப்படும். முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு நகரில் நிலச்சேர்ம வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும். நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.
300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் ஈரோட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய வாகன நிறுத்த கொள்கை உருவாக்கப்படும்.