கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன்ராஜ் உறுதியாக இருந்தார் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவு சர்ச்சையானது.
இந்நிலையில் அண்ணாமலையின் கருத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தொடர்பு படுத்தி, சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
நான் பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகனின் பிரசவத்தை கவனத்தில் கொள்வதன் கட்டாயத்தின் பேரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நான் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால் கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி என் மீது உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை பரப்புகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்று அவர் பேசியுள்ளார்.