இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அனிதா உள்பட பல மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் 5-ந்தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியானது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. கடும் நெருக்கடியின் விளைவாக இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பல மாநிலம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நீட் தேர்வை மாநில அரசே எடுத்து நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். அதில், நீட் தேர்வை ரத்து செய்ய பரிசீலிக்க வேண்டும். வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து மாநிலங்களே நீட் தேர்வை நடத்தும் முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் மருத்துவ கல்வியின் தரம், சிகிச்சைகளின் தரத்தை வெகுவாக பாதிக்கும்.
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசு தன்னிச்சையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதை ஏற்க முடியாது. இது நாட்டில் உள்ள கூட்டாச்சி அமைப்பு முறையை மீறும் செயல் என கூறியுள்ளார்.