தி.மு.க. ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பலஅவறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு

சட்டசபையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

அடுத்தவன் சொத்தை அபகரித்தால் ஆண்டவன் தான் கேட்க வேண்டும். ஆண்டவன் சொத்தை அபகரித்தால் ஆள்பவர் தானே கேட்க வேண்டும். அந்த வகையில், திராவிடமாடல் ஆட்சியில் இதுவரை ரூ.6,004 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

இந்த 3 ஆண்டுகளில் தெய்வங்களாக இருக்கின்ற சிலைகள், கலைப்பொருட்கள் மொத்தம் 420 இனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பாதுகாப்பு அறைகள் கட்டி பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் திருப்பணிகள் இதிகாச காலத்திற்கு இணையானது. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறுகிற அளவிற்கு 8,962 கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மொத்த திருப்பணிகள் 20,166 மதிப்பீட்டுத் தொகை ரூ.5,097 கோடி இதுவரை நிறைவுற்ற பணிகள் 7,648 எங்கள் முதல்வரின் காலம் பக்தர்களின் நற்காலம். ஆம், கடந்த 3 ஆண்டுகளில் 1,810 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. 15 கோவில்களில் ரூ.1,405 கோடிகளில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டம் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது திராவிட மாடலின் மாட்சி புரியும்.திருவிழாக்களின் கம்பீரம் திருத்தேர்கள். தங்கத் தேர்கள் 68, வெள்ளித் தேர்கள் 55, மரத்தேர்கள் 1,097, இதில் தங்க, வெள்ளித்தேர்கள் உலா வருகின்றன. 41 மரத்தேர்கள் 8 கோடி ரூபாயில் பழுது நீக்கப்பட்டு 1,097 மரத்தேர்களும் திருவீதி உலா வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டு 1,014 கோவில்களில், ரூ.970 கோடி மதிப்பீட்டில் 1,240 பணிகள் நடைபெற உள்ளன.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் கோவில்கள் அதிகம். காரணம், நாம் கோவில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோவிலில் வைத்து வணங்கலாம். பிரசாரத்திற்கு அழைத்து வராதீர்கள்.

இறைவனிடம் வரம் கேளுங்கள். இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். உலகிற்கே பொதுமறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும். மனித நேயம் ஒருபோதும் இம்மண்ணை விட்டு அகலாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

Leave a Comment