புதுச்சேரி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 31 பேர் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பளித்தது
புதுச்சேரி முதலியார் பேட்டை தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி(33).இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஜாமீனில் வெளியே வந்த ரவி, வாணரப்பேட்டையை சேர்ந்த பரிடா அந்தோணி ஸ்டீபன்(28) என்ற நண்பருடன் 2021 அக்டோபர் 24ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவர்களை வாணரப்பேட்டை ஆலன்வீதி,ராஜராஜன் வீதி சந்திப்பில் வழிமறித்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. அதில் தப்பித்த 2 பேரையும் கத்தியால் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக ரவுடி வினோத், தீன், மர்டர் மணிகண்டன், தியாகு, பிரேம், ராஜா, தேவேந்திரன், அருண், பிரவீன், ரோமாக், ஆட்டோ மணி உட்பட 31 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.
இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி சந்திரசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
அதில் சந்தேகத்துக்கு இடமின்றி காவல்துறை குற்றங்களை நிரூபிக்க தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 31 நபர்கள் விடுதலை செய்வதாகக்கூறி தீர்ப்பளித்தார்.
இதில் போலீசார் கைது செய்யும்போது கையில் ஆயுதங்களுடன் இருந்ததால் பிரேம் என்ற குற்றவாளிக்கு ஏழு வருட தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.