ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில்,
கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். 1999-ம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரத அன்னையைப் பாதுகாக்கும்போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்களது தியாகம் மற்றும் வீரம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.