உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.
போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.
இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.
இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.
அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.