கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசியுள்ளார்.
“கேரளாவின் வயநாட்டில் அரங்கேறும் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு பாராளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பேரிடர் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கென விரிவான ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.