வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், இனி அங்கிருந்து மீட்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணி அளவிட முடியாதது.

200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. முண்டகை, சூரல்மலை பகுதிகளுக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாததால், மண்ணுக்குள் சிக்கிய உடல்களை மீட்க முடியவில்லை.

இப்போது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து செய்ய வேண்டிய செயல்களே ஆகும். அதனை அரசு பொறுப்புடன் மேற்கொள்ளும்.

இந்த பகுதியில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment