கடந்த 2021-ம் ஆண்டு முதல் புதுவைக்கு தனி ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தனி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார். அவர் சுமார் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். .
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு ஆளுநராலக பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 3½ ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி துணைநிலை ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநர்களே புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் இருந்து புதுச்சேரி அரசை நிர்வகித்து வந்தனர்.
இந்த நிலையில் புதுவையின் பொறுப்பு ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய துணைநிலை ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாஷ்நாதனை குடியரசுதலைவர் திரவுபதி முர்மு நியமித்தார். புதிய ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுவைக்கு வந்தார்.
அவரை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநர் பதவியேற்பு விழா நடந்தது.இதற்காக கஆளுநர் மாளிகை வளாகத்தில் மேடையும், பந்தலும், விருந்தினர் அமர இருக்கையும் அமைக்கப்பட்டிருந்தது.
சரியாக காலை 11.15 மணிக்கு மாளிகையிலிருந்து கைலாஷ்நாதன் மேடைக்கு வந்தார். இதனையடுத்து பதவியேற்பு விழா, தேசிய கீதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புதுவை தலைமை செயலாளர் சரத்சவுகான், புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான குடியரசுதலைவரின் உத்தரவை வாசித்தார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய துணைநிலை ஆளுநருக்கு கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.