‘இதற்குமேல் போராட என்னிடம் வலிமை இல்லை’

மகளிருக்கான மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப் பிரிவிலேயே வினேஷ் போகத் போட்டியிட விரும்பியதாகவும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கட்டாயத்தால்தான் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் செவ்வாய்க்கிழமை களம்கண்ட முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை தோற்கடித்த வினேஷ் போகத், அடுத்தடுத்து காலிறுதி, அரையிறுதிகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதிச் சுற்றில் ஏற்கெனவே இரண்டு முறை வினேஷ் போகத்தால் தோற்கடிக்கப்பட்ட சாரா ஹில்டெப்ராண்ட்டை அவர் எதிர்கொள்ள இருந்த நிலையில், புதன்கிழமை காலை செய்யப்பட்ட பரிசோதனையில் கூடுதலாக 100 கிராம் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத், எடையை நிர்வகிக்க கடினமாக இருந்த காரணத்தால் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வந்தார்.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவிலேயே வினேஷ் போகத் போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரைவிட இளைய வீரரான அன்டிம் பங்காலுக்கு 50 கிலோ எடைப் பிரிவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒலிம்பிக் செல்ல வேண்டுமென்றால் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க வினேஷ் போகத்தை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்பந்தித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது எடையை குறைக்க கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்ட வினேஷ் போகத், ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டியில் 49.90 கிலோ எடையுடன் களம் கண்டார்.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் தகுதிச் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றதால், அவரின் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காக 2 லிட்டர் அளவு திரவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 2,000 கிராம் வரை எடை கூடியுள்ளது.

மேலும், காலை உணவால் 300 கிராமும், இரண்டு சிற்றுண்டிகளால் 700 கிராமும் அதிகரித்துள்ளது.

இறுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போட்டி முடிந்த பிறகு, வினேஷ் போகத்தின் எடையை பரிசோதித்ததில் 52.7 கிலோ எடையில் இருந்துள்ளார்.
இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான எடை பரிசோதனை மறுநாள் காலை 7.30 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில், இரவு முழுவதும் தூங்காமல் வினேஷ் போகத் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

உணவு சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் சைக்கிளிங், ஜாகிங், ஸ்கிப்பிங் என வியர்வையை அதிகமாக வெளியேற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வினேஷ் ஈடுபட்டுள்ளார்.

புதன்கிழமை அதிகாலை இந்திய பயிற்சியாளர்கள் சோதனை செய்ததில் 150 கிராம் மட்டுமே கூடுதல் எடையுடன் வினேஷ் போகத் இருந்துள்ளார்.

தொடர்ந்து கடைசி நிமிட பயிற்சிகளால் மேலும் 50 கிராம் வரை வினேஷ் போகத் எடையை குறைத்துள்ளார். தனது தலை முடியையும்கூட வெட்டியுள்ளார்.

இருப்பினும், காலை 7.30 மணியளவில் ஒலிம்பிக் நிர்வாகத்தினர் இருவர், மருத்துவர் ஒருவர், நடுவர் ஒருவர் அடங்கிய குழு, வினேஷ் போகத்தை பரிசோதித்ததில் கூடுதலாக 100 கிராம் இருந்துள்ளார்.
போட்டி நடைபெற நீண்ட நேரம் இருந்ததால் எடையை குறைக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது, ஆனால், விதிமுறைகளின்படி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் மயக்கமடைந்த வினேஷ் போகத், ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாரீஸில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் ரத்த பரிசோதனைகள் மேற்கொண்டதில் வினேஷ் போகத் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ”வினேஷ் போகத்துக்கு வழங்கப்பட்ட ஓஆர்எஸ் திரவத்தால் அவர் 2.7 கிலோ அதிகமாகியுள்ளார், ஒரே இரவில் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய வைக்கப்பட்டுள்ளார். இது அலட்சியமான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.

53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத்தை போட்டியிட அனுமதித்திருந்தால் எளிதாக அவர் தனது எடையை நிர்வகித்திருப்பார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், வினேஷ் போகத்துக்கு பதிலாக 53 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அன்டிம் பங்கல், தகுதிச் சுற்றில் தோற்றதுடன் தனது அங்கீகார அட்டையை விதியை மீறி பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வினேஷ் போகத், ’இதற்குமேல் போராட என்னிடம் வலிமை இல்லை’ எனக் கூறி ஓய்வை அறிவித்து தனது கனவை முடித்துக் கொண்டார்.

Related posts

Leave a Comment