வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனாகடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளன. மேற்குவங்கம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இந்த5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி, வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 50 மீட்டர் தொலைவு இடைவெளியில் பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேகாலயா மாநிலம் வங்கதேசத்துடன் 443 கி.மீ. தொலைவை பகிர்ந்துள்ளது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு வேலி இல்லை. வழக்கமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் நாள்தோறும் மேகாலயாவுக்கு வந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கம். தற்போது வங்கதேச மக்களின் வருகை முழுமையாக தடுக்கப்பட்டு உள்ளது.
மிசோரம் மாநிலம் வங்கதேசத்துடன் 273 கி.மீ. தொலைவை பகிர்ந்துள்ளது. இது மலைப்பகுதி என்பதால் ஊடுருவலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவின் திரிபுரா மாநிலம், வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் 8 சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகள் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் நுழைவது வழக்கம். தற்போது வங்கதேச மக்களின் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அசாமில் இருந்து வங்கதேசத்துக்கு பாரக் நதியின் வழியாக நாள்தோறும் மாடுகள் கடத்தப்படுவது வழக்கம். தற்போது பிஎஸ்எப் வீரர்களின் பலத்த பாதுகாப்பு காரணமாக மாடுகள் கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது.
அசாதாரண சூழல் காரணமாக மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர். அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி திருப்பி அனுப்பி வருகிறோம். இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரும்பாலான இந்துக்கள் அங்கிருந்து தப்பி மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று டாக்கா நகர தெருக்களில் இந்துக் கள் இறங்கிப் போராட்டம், ஊர்வலம் நடத்தினர். இந்துக்கள். கோயில்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்றும், நாங்களும் பெங்காலிதான் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர்கள் கண்டன ஊர்வலம் போராட்டத்தின் போது, ‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா’ என்ற நாமத்தையும் உச்சரித்தனர்.