காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது.
இருந்தபோதிலும் லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையல் இன்று காலை வடக்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹமாஸ் அதிகாரி சயீத் அதல்லா அலி கொல்லப்பட்டார். அத்துடன் அவரது குடும்பமும் இந்த வான்தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளது.
சிரியாவுடன் லெபனானை இணைக்கும் மிகப்பெரிய சாலையை இஸ்ரேல் ராணுவம் துண்டித்துள்ள நிலையில் தற்போது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்த தொடங்கியது தெற்கு லெபனானில் நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் சண்டை தொடங்கியதில் இருந்து லெபனானில் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் 23-ந்தேதி அதிகமானோர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சயீத் அதல்லா அலி ஹமாஸ் ராணுவ பிரிவான குவாசம் படைப்பிரிவின் அதிகாரமாக இருந்தார். அவரது மனைவி ஷாய்மா அசாம், அவரது இரண்டு மகள்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பெத்தாவி முகாம் லெபனானின் வடக்கு நகரான திரிபோலி அருகில் உள்ளது.