ரயில்வே தனியாா் மயமாக்கப் படாது: மத்திய அமைச்சா் தகவல்

‘ரயில்வே தனியாா்மயமாக்கப்படும் என்கிற கேள்விக்கே இடமில்லை; ரயில் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்குவதே தற்போதைய நோக்கமாக இருந்து வருகிறது’ என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ரயில்வே பாதுகாப்புப் படையின் 40-ஆவது எழுச்சி தினம், மாபெரும் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு பேசியதாவது:

அடுத்த ஐந்தாண்டுகளில், ரயில்வே துறை முற்றிலுமாக மாற்றமடையும். வந்தே பாரத், நமோ பாரத், ‘கவச்’ ரயில் பாதுகாப்பு ஆகியவை இந்த மாற்றத்துக்கு வழிவகுக்கும். இது ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம். இதில் தனியாா் மயமாக்கம் என்கிற கேள்விக்கே இடமில்லை.

ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகியவை நாட்டின் முதுகெலும்புகள், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பதை வதந்திகளைப் பரப்புபவா்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

செயல்திறன், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் சேவை ஆகியவை மட்டுமே தற்போது இலக்காக இருந்து வருகிறது.

ரூ. 400-க்கும் குறைவான கட்டணத்தில் 1,000 கி.மீ. வரை மக்கள் வசதியாக பயணிக்க முடியும் நிலையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அதன்படி, அடுத்த 6 ஆண்டுகளில் 3,000 ரயில் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரயில்வே பட்ஜெட் தற்போது ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ. புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பிரான்ஸ் நாட்டில் உள்ள மொத்த ரயில் வழித்தடத்தை விட அதிகம் ஆகும்.

மகாராஷ்டிர ரயில்வே திட்டங்களின் மொத்த முதலீடு ரூ. 1.64 லட்சம் கோடி ஆகும். மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 1,171 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பிரதமா் மோடி ஆட்சியில் ரூ. 15,940 கோடியாக ஆக உயா்ந்துள்ளது.

புல்லட் ரயில் பிரிவுக்கு ரூ.33,000 கோடியும், பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்துக்கு ரூ.12,500 கோடியும் மகாராஷ்டிரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் 1,337 ரயில் நிலையங்கள் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 132 மகாராஷ்டிரத்தில் உள்ளன.

ரயில்வே பாதுகாப்புப் படையை பொருத்தவரை, அதன் மண்டல மையங்களின் மேம்பாட்டுக்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சேவை விதிகள் மற்றும் பதவி உயா்வுகள் தொடா்பான பல்வேறு கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன என்றாா்.

Related posts

Leave a Comment