நாகப்பட்டினம்-இலங்கை இடையிலான கப்பல் சேவை 18-ஆம் தேதி வரை நிறுத்தம்

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இரண்டு நாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மேலும் வருகிற 16-ம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமான இன்று (14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment