புதுச்சேரி சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதியான பிரபல தாதா கர்ணா குடும்பத்துடன் தலைமறைவானார். கோவையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல தாதா கர்ணா( 55) இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஒரு கொலை வழக்கில் அவருக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து கடந்த 23 வருடங்களாக அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி கடந்த 11ஆம் தேதி கர்ணா பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதுவரை அவர் குடும்ப நிகழ்ச்சி, உறவினரை சந்தித்தல் என 35 முறை பரோலில் வெளியே வந்து சென்றுள்ளார். இந்த முறை அவருக்கு 3 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டு இருந்தது இதனுடைய அவரின் பரோல் 11ஆம் தேதி மாலையுடன் முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் காலாப்பட்டு சிறைக்குச் செல்லவில்லை. இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் முதலியார் பேட்டை காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் கர்ணா வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் அவர் கோவையில் கேரளா எல்லையை ஒட்டி பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதில் கர்ணாவிற்கு பரோலில் வெளியே வருவதற்கு ஜாமீன் கொடுத்த விஜயகுமார் முருகன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கர்ணா குடும்பத்துடன் பழகியவர்கள் நண்பர்கள் என சிலரை பிடித்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் கோவையில் தான் தங்கி இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவையில் அவர் தங்கியிருந்த வீட்டை போலீசார் நோட்டமிட்டனர்.

அப்பொழுது ஒரு ஆசிரியரின் வீட்டில் தனியாக இருந்த அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆயுள் தண்டனை பெற்று 14 ஆண்டுகள் ஆகியும் விடுதலை செய்யாமல் இருப்பதாலும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டதனாலும், தன்னுடைய சொத்துக்களை விற்று எங்கேயாவது சென்று தலைமறைவு வாழ்க்கை வாழலாம் என்று அவர் ரவுடி கும்பளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது தெரிய வந்தது, அதில் முக்கியமாக ரவுடி சோழனுடன் சேர்ந்து அவர் இந்த திட்டத்தை தீட்டி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர். இன்று அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் தான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.