பொறுப்பற்ற தன்மையால் மக்கள் தங்களது உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலியாகினர். சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது.
தில்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மைய கட்டடத்தின் கீழ்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி மாணவர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாள்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலியானார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் சாமானிய குடிமக்கள் தன் உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பாக மற்றும் வசதியாக வாழ்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.